முக்கிய செய்திகள்

பார்ப்பனிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு பெரியாரைப் பார்க்க முடியுமா? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

chemparithi article on Periyar

__________________________________________________________

 

இப்போதும் ஆதிக்க சக்திகளின் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் ஆளுமையாகத் தான் அவர் இருக்கிறார்.

 

ஒருவர் மறைந்து 38 ஆண்டுகளுக்குப் பின்னரும் மூடர்களாலும், பிற்போக்காளர்களாலும் எதிர்க்கப்படும் கிளர்ச்சியாளராகவே அவரது இருப்பு தொடர்கிறது என்றால், அவரது லட்சிய உயிர்ப்புக்கு அதைவிட வேறு சான்று என்ன தேவை இருக்கிறது.thanthai-periyar

 

பெரியாரைப் பற்றிப் பேசாமல், தமிழகத்தில் இனி எந்த ஊடகமும் இயங்க முடியாது என்ற உண்மையை அவற்றின் சூத்திரதாரிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். இருப்பினும் மிகக் கவனமாகவே ஒன்றை அவர்கள் தவிர்த்து வருகின்றனர். பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புதான் அது. பெரியார் வாழும் காலத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் இருந்ததாகவும், இப்போதெல்லாம் அது காலாவதியாகிப் போய் விட்டதாகவும், முற்றிலும் பொய்யான ஒரு கற்பனைக் கருத்துச் சித்திரத்தை இன்றைய தலைமுறையினர் மத்தியில் மிகக் கவனமாக அவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

 

யார் சொன்னது பார்ப்பனியம் காலாவதியாகி விட்டதாக…

 

இட ஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாக அரசுப் பணிகளில் வேண்டுமானால், பார்ப்பனரல்லாதாருக்கு குறைந்த பட்ச வாய்ப்புகள் கிடைத்து வருவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இப்போது அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், பெருமுதலாளிகளின் வெகுசன ஊடகங்கள் போன்ற தற்போதைய நவீனச் சூழலின் பெருவாரியான அதிகார வெளி முழுவதையும் அவர்கள்தானே ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

 

சாதியமைப்பிலும், கட்டுமானத்திலும் சிறிய கீறல் விழத் தொடங்கியதுமே மேற்குலக நாடுகளின் பக்கம் தங்களது பார்வையைத் திருப்பினர். ஏழை, எளிய உழைக்கும் மக்கள் வியர்வை சிந்திக் கட்டும் வரிப்பணத்தில் நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை, “மெரிட்” என்ற அறிவுச் சுரண்டலின் உதவியுடன் கைப்பற்றி, அதன் மூலம் பெறும் அறிவை தந்திரமாக விற்றுப் பிழைக்க வழி தேடினர். அதன் விளைவுதான், பார்ப்பனர்களின் இன்றைய தலைமுறையினர் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குடியேறிக் கோலோச்சி வருகின்றனர். ஏழை, எளிய, கீழ்த்தட்டு நடுத்தர மக்களோ தங்களது உழைப்பை அரசுக்கு வரி உட்பட பல வழிகளிலும் செலுத்திவிட்டு, இலவச கிரைண்டர், மிக்சி, ஆடு, மாடு, கோழிகளுக்காக காத்திருக்கிறார்கள். அப்போது அரசுப் பணி எப்படி அவர்களுக்கு தொலைதூரக் கனவாக இருந்ததோ, அதே போல இப்போது தரமான உயர்கல்வியும், பெருநிறுவனங்களின் அதிகாரப் பதவியும் தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது.

 

தமிழகமாகட்டும், இந்தியாவாகட்டும் பெருநிறுவனங்களின் முக்கியப் பதவிகளில் எத்தனை பார்ப்பனரல்லதார் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள் என்பதைக் கவனித்தாலே இது புரியும். நிறுவனங்களைத் தொடங்குவோரும், நடத்துவோரும் பார்ப்பனரல்லாதாராக இருப்பினும் அவற்றை வழிநடத்துபவர்களாக பார்ப்பனர்களே கோலோச்சுகின்றனர். “வெள்ளையாக (வெள்ளை என்பது நிறம் மட்டுமல்ல, பார்ப்பனியத்தின் குண அடையாளம், கருப்புப் பார்ப்பனர்களும் இதில் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல) இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்” என்ற மூட நம்பிக்கை கருப்பு முதலாளிகளை விட்டு இன்னும் அகன்ற பாடில்லை.periyar anna

 

பார்ப்பனியம் என்பது காலத்திற்கேற்ப தனது ஆதிக்க சூழ்ச்சியை தகவமைத்துக் கொள்ளும் தந்திரம் மிக்கது. அதனை முறியடிக்க கத்தியும், கோடரியும் பயன்படாது என்பதால்தான், பெரியாரும், அண்ணாவும் அறிவாயுதம் ஏந்திப் போராடுவதற்குச் சொல்லிக் கொடுத்தனர். தமிழ்ச் சமூகத்தின் நுட்பமான சிக்கலாக இருந்து வரும் சாதியச் சிடுக்கை அறிவாயுதம் மூலமாக மட்டுமே அறுத்தெறிய முடியும் என்பதை மிகத் தெளிவாக இருவரும் கண்டறிந்தனர்.

 

ஐஐடி ஆகட்டும், ஐடி- யாகட்டும், கார்ப்பரேட்டாகட்டும் எல்லாமே இப்போது பார்ப்பனியத்தின் சூட்சுமமான அதிகாரப் பிடியில் இருக்கிறது என்பதை, அந்த அந்தத் தளத்தில் அதனை எதிர் கொள்வோர் அறிவர். பார்ப்பனியம் காலாவதியாகி விட்டதாக கதை கட்டி, தமிழ்ச் சமூகத்தின் இன்றைய தலைமுறையினரை மீண்டும் பல நூறாண்டுகள் பின்னுக்குத் தள்ளப் பார்க்கும் “அறிவுஜீவிகளை” அடையாளம் காண்பதே பெரியார் குறித்த சரியான மறுவாசிப்பாக இருக்கும்.

 

கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, சமூகநீதி, பெண்விடுதலை என்ற பெரியாரின் அனைத்துப் போராட்டக் காரணிகளும், பார்ப்பனிய எதிர்ப்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கி விடுகின்றன.periyar 16.6

 

பார்ப்பனியம் வகுத்த வர்ணாசிரமத்தின் அடிப்படையில்தானே இத்தனை சமூக அவலங்களும் இன்று வரை அரங்கேறி வருகின்றன. பின் எப்படி பார்ப்பனிய எதிர்ப்பை விலக்கிவிட்டு பெரியாரைப் பின்பற்ற முடியும்?

 

வர்ணாசிரமத்தின் ஒரு பிள்ளைதான் சாதி.

 

வர்ணாசிரமத்தின் மற்றொரு பிள்ளைதான் தீண்டாமை.

 

மற்றுமொரு பிள்ளைதான் பெண்ணடிமைத் தனம்.

 

கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கை இப்படி எதை நீங்கள் தோண்டிப் பார்த்தாலும், அதன் வேராக பார்ப்பனியம் பின்னிக்கிடப்பதை அறிய முடியும்.

 

அதிலும் காலத்துக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்வதில் கில்லாடியான பார்ப்பனியத்தின் கார்ப்பரேட் யுகத்துக்கான தற்போதைய நவீன வடிவம் தான், மோடி அரசும், இந்துத்துவாவைப் புனரமைக்கும் அதன் ஆட்சி நடைமுறைகளும்.

 

மாமிச விற்பனையைத் தடை செய்வது, மதச்சார்பற்ற தன்மையின் அடையாளமாக பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் தபால் தலைகளைத் திரும்பப் பெற்று விட்டு, உபாத்யாயா, வல்லபாய் படேல் போன்ற இந்துத்துவவாதிகளின் தபால் தலைகளைப் புழக்கத்தில் விடுவது என அதன் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தத் தொடங்கி இருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மோடியின் பெயரால் திட்டமிட்ட பரப்புரையை மேற்கொண்ட பார்ப்பன கும்பல், இப்போது இந்தியத் துணைக் கண்டத்தையே தன் வலைக்குள் மிக லாவகமாகச் சிக்கவைத்துவிட்டது.

 

இந்த உண்மையை இன்றைய பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அறிந்து விடக் கூடாது என்பதற்காகத்தான், பெரியாரை “சாமி வேண்டாம் என்றார், சாதி வேண்டாம் என்றார், காந்தியைப் போலவே தீண்டாமையை எதிர்த்தார்” என மேலோட்டமான “சீர்திருத்தவாதி”யாக அடையாளப் படுத்துகின்றனர்.

 

முற்போக்கு வேடம் பூண்ட சில பார்ப்பனிய சக்திகள் மிகக் கவனமாக பெரியாரை “சமூக சீர்திருத்தவாதி” என்ற மழுங்கடிக்கப்பட்ட அடையாளத்துடன் இன்றைய தலைமுறையினருக்கு பெரியாரை அறிமுகப்படுத்துவதன் பின்னணியும் இதுதான்.

 

பார்ப்பனியத்தின் இத்தகைய சூழ்ச்சியை அம்பலப்படுத்துவதும், அறிய வைப்பதும்தான் பெரியாரைச் சிந்திப்பவர்களின் தலையாய கடமையாக தற்போது இருக்கிறது.

 

பார்ப்பனிய எதிர்ப்புதான் கடவுள் எதிர்ப்பு.

பார்ப்பனிய எதிர்ப்பு தான் மூடத்தன எதிர்ப்பு

பார்ப்பனிய எதிர்ப்புதான் சாதி எதிர்ப்பு

பார்ப்பனிய எதிர்ப்புதான் மத எதிர்ப்பு

பார்ப்பனிய எதிர்ப்புதான் பெண்ணடிமை எதிர்ப்பு

பார்ப்பனிய எதிர்ப்புதான் தீண்டாமை எதிர்ப்பு

பார்ப்பனிய எதிர்ப்புதான் சமூக நீதி சார்ந்த அனைத்து எதிர்ப்பும்

periyar anniv 5

பார்ப்பனியம் என்பது, பிறப்பால் மட்டுமின்றி சிந்தனையாலும் பலரிடத்திலும் ஊடுருவி இருப்பதை நாம் காண முடியும். பிறப்பால் பார்ப்பனர்களாக இருக்கும் சிலரைவிட, பார்ப்பனரல்லாதாராகப் பிறந்து, நாடி,நரம்பு, மூளை என அனைத்திலும் பார்ப்பனிய நச்சுப் பாய்ந்த சிலர், பார்ப்பனர்களை விட, சமூகப் பேரிடர்களையும், பேரழிவுகளையும், சீரழிவுகளையும் ஏற்படுத்தக் கூடிய அபாயம் மிக்கவர்கள்.

 

ஆக பார்ப்பனிய எதிர்ப்பைத் தவிர்த்துவிட்டு பெரியாரை அடையாளப் படுத்துவது ஒரு வரலாற்று மோசடி மட்டுமல்ல, மெல்ல மெல்ல பெரியாரை நீர்த்துப் போகச் செய்வதற்கான பெரும் சூழ்ச்சி. பெரியார் எனும் நெருப்பை அனைத்துவிட்டு, வெறும் கரிக்கட்டையைக் காட்டி இவர்தான் பெரியார் என அடையாளப் படுத்தும் கீழறுப்பு வேலை.

 

எனவே பெரியார் எனும் பேராளுமையை அதன் தீவிரம் குறையாத உண்மையான காத்திரத்துடன் இளைஞர்கள் மத்தியில் பதிய வைப்பதே தற்போது தேவைப்படும் பெரும் பணி.

 

வெற்றுச் சொற்களால் பெரியாரைப் புகழ்வதையும், வழிபடுவதையும் விட்டு விட்டு, சமகாலச் சூழலிலும் அவர் எந்த அளவுக்குத் தேவைப்படுகிறார் என்பதை அறிவுத் தளங்களில் பதிய வைக்க முயல்வோம்.

 

பெரியார் என்பவர் வெறும் வழிபாட்டுப் பொருளல்ல. சமூகத்தை வழிநடத்துவதற்கான சிந்தனை.

 

_________________________________________________________________________________________